டிரைவர் பணியிடை நீக்கம்
டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் விக்கி என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 30). இவர் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரையின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பஸ்சில் புனல்குளம் செல்வதற்காக அந்த பஸ் புனல்குளம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படுமா? என்பது குறித்து டிரைவர் செந்தில்குமாரிடம் கேட்ட போது அவர் சரியாக பதில் அளிக்கவில்லையாம். தொடர்ந்து இதுபோன்று செயல்படுவதாகவும், பாலசுப்பிரமணியனை தரக்குறைவாக டிரைவர் பேசியதாகவும் கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாணவர் சங்கத்தினர் நேற்று இரவு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அதுவரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி நள்ளிரவு வரை பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்த பஸ் தஞ்சாவூர் சென்றது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில் டிரைவர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நேற்று காலை உத்தரவிட்டனர்.