எம்.பிக்கள் நீக்கம்: ஜனநாயக உரிமைகளை அழித்தொழிக்கும் செயல் - முத்தரசன்


எம்.பிக்கள் நீக்கம்: ஜனநாயக உரிமைகளை அழித்தொழிக்கும் செயல் - முத்தரசன்
x

எம்.பிக்களின் கருத்துரிமையை பறித்து, அவர்களின் செயல்பாடுகளை முடக்குவது ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயல் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரிமையை பறித்து, அவர்களின் செயல்பாடுகளை முடக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயலாகும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரிமையை பறித்து, அவர்களின் செயல்பாடுகளை முடக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயலாகும். மாநிலங்களவையில் மக்கள் வாழ்வில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையுயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரிவிதித்திருப்பது, ராணுவத்துக்கு வீரர்கள் தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சில நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் ஆளும் பாஜக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை தவிர்த்து அரசின் நிர்வாக உத்தரவின் மூலமாக எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருவது நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைத்து, அவை உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயலாகும். கூட்டத் தொடர் முழுவதும் 19 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பாஜக ஒன்றிய அரசு நாடாளுமன்ற நடைமுறைகளை மதித்து நடக்க வேண்டும், உறுப்பினர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையில் பிரதமர் தலையிட்டு ரத்து செய்து, அவையில் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story