சென்னையின் முதல் மேம்பாலம் என்ற சிறப்பை பெற்ற அண்ணா மேம்பாலம் ரூ.8.85 கோடியில் சீரமைப்பு - பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்


சென்னையின் முதல் மேம்பாலம் என்ற சிறப்பை பெற்ற அண்ணா மேம்பாலம் ரூ.8.85 கோடியில் சீரமைப்பு - பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்
x

சென்னையின் முதல் மேம்பாலம் என்ற சிறப்பை பெற்ற அண்ணா மேம்பாலம் ரூ.8.85 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை

சென்னையின் மையப் பகுதியில் 5 சாலைகள் சந்திப்பில், அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) கட்டப்பட்டதாகும். சுமார் 600 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை 1971-ம் ஆண்டு ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு, 1-7-1973 அன்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

இது சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம். மேலும், இந்தியாவிலேயே மூன்றாவதாக கட்டப்பட்ட மேம்பாலம் ஆகும். ஜெமினி ஸ்டூடியோ இங்கு அமைந்திருந்ததால் ஜெமினி மேம்பாலம் என அழைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பெயரை அண்ணாவின் நினைவாக கருணாநிதி, அண்ணா மேம்பாலம் என மாற்றி பெயரிட்டார்.

1974-ம் ஆண்டில், குதிரைப் பந்தயத்தைத் தடை செய்ததை நினைவுகூரும் வகையில் குதிரையைக் கட்டுப்படுத்தும் மனிதன் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 20 ஆயிரம் வாகனங்கள் இப்பாலத்தின் வழியே செல்கின்றன.

இப்பாலம் சி.ஆர்.ஐ.டி.பி. 2021-2022 திட்டத்தின்கீழ் ரூ.8.85 கோடி மதிப்பீட்டில், சீரமைக்கும் பணிகள், இப்பாலத்தின் தூண்களை ஜி.ஆர்.சி. பேனல்கள் கொண்டு மறுவடிவமைப்பு செய்யவும், இப்பாலத்தின் கீழே பொலிவூட்டும் வகையில் பசுமை செடி வகைகள் அமைக்கவும், பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.

இப்பணியை அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்துக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story