கொடுங்கையூர் குப்பை கிடங்கு ரூ.648 கோடியில் சீரமைப்பு... மெரினாவில் இலவச 'வைபை' வசதி - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


கொடுங்கையூர் குப்பை கிடங்கு ரூ.648 கோடியில் சீரமைப்பு... மெரினாவில் இலவச வைபை வசதி - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x

‘பயோ மைனிங்’ நவீன தொழில்நுட்பத்தில் கொடுங்கையூர் குப்பை கிடங்கு ரூ.648 கோடியில் சீரமைக்க முடிவு செய்யப்படுவதாக மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-

சென்னை

* சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே இலவச வை-பை வசதி அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் மாநகராட்சி இணைந்து நிபந்தனைகளுடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

* வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக எழும்பூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, தியாகராயநகரில் உள்ள தனியார் பட்டா நிலங்களை நில எடுப்பு நடவடிக்கைகள் மூலம் அரசு நிலங்களை நில உரிமை மாற்றம் செய்திட தீர்மானிக்கப்படுகிறது.

* மாநகராட்சி பணிகள் மற்றும் மாநகராட்சி ஒப்பந்தங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தேவைப்படும் கூடுதல் தொகையை மாநகராட்சியின் சொந்த நிதியில் இருந்து விடுவித்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

* தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்ககத்தின் கீழ் பணிபுரிய நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி வரை தற்காலிக பணியாளர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள பணியாளர்களின் பணிக்காலத்தை அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கவும் உத்தரவிடப்படுகிறது.

* கொடுங்கையூர் குப்பை கிடங்கு ரூ.648.38 கோடி செலவில் பயோ மைனிங் முறையில் நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. வல்லுனர்கள் இணைந்து இதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளனர். அதன்படி 6 கட்டங்களாக சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

* மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறை சார்பில் சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றிக்கொள்ளும் நிலையம் அமைக்க (மண்டலந்தோறும்) ஒரு வருட அனுமதி வழங்கப்படுகிறது.

மேற்கண்டவை உள்பட 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story