மழையால் பழுதான மின்சார கட்டமைப்புகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு


மழையால் பழுதான மின்சார கட்டமைப்புகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
x
தினத்தந்தி 20 Jun 2023 5:00 PM GMT (Updated: 20 Jun 2023 5:00 PM GMT)

‘மழையால் பழுதான மின்சார கட்டமைப்புகள் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மின்சார வினியோகம் செய்யப்படுகிறது’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னை

பட்டினப்பாக்கம் துணை மின்நிலையம் பழுது

சென்னை, பட்டினப்பாக்கம் துணை மின்சார நிலையத்தில் ஏற்பட்ட பழுதை, சரிபார்க்கும் பணியை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடித்து இயக்கத்திற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அவர் உத்தரவிட்டார். உடன் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் (மின் தொடரமைப்பு கழகம்) இரா.மணிவண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின்சார விநியோகம் வழங்கப்படும் 208 துணை மின்சார நிலையங்களில் 3 துணை மின் நிலையங்களும், 1,857 மின் பாதைகளில் 49 மின் பாதைகளும், 35 ஆயிரத்து 859 மின்மாற்றிகளில் 51 மின்மாற்றிகளும் பழுதடைந்தன. அனைத்து பழுது ஏற்பட்ட பகுதிகளுக்கும் 1 மணி நேர அளவில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

சீரான மின்சாரம்

பழுதான மின்பாதைகள் சரிசெய்யப்பட்டுவிட்டன, பழுதான மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுவிடும். சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்களில் அமைந்துள்ள 4 ஆயிரத்து 398 பில்லர் பாக்ஸ்கள் உயர்த்தப்பட்டது. 73 பில்லர் பாக்ஸ்களில் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருந்து உடனுக்குடன் சீரான மின்சாரத்தினை பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், பொதுமக்களிடமிருந்து புகார் வந்தால், அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

முதல்-அமைச்சர் உத்தரவு

பின்னர், அமைச்சர் தங்கம் தென்னரசு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜூன் மாதத்தில் பெய்த திடீர் கனமழையால் பழுதடைந்த மின் மாற்றிகள், மின் பாதைகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில், மழையால் பட்டினப்பாக்கம் துணைமின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி பகுதடைந்தததால் அப்பகுதியில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.

உடனடியாக மாற்று மின்மாற்றி மூலம் மின்சாரம் வினியோகம் வழங்கப்பட்டது. தற்போது அந்த மின்மாற்றியும் பழுதடைந்துவிட்டது. மின்சாரத்துறை துரித நடவடிக்கை எடுத்து மாற்று மின்சார பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 துணைமின்சார நிலையங்கள், 49 மின்சார பாதைகள், 51 மின்மாற்றிகள் மற்றும் 27 பில்லர் பாக்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப காரணம்

மழையின் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போர்கால அடிப்படையில் இரவு, பகல் பாராமல் மழையோடு துரிதமாக செயல்பட்டு 2 மணி நேரத்திற்குள் மின்சார வினியோகத்தை சீரமைத்தனர். தற்போது, பட்டினப்பாக்கம் துணைமின் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு விரைவாக மின்சாரம் வினியோகம் செய்யப்படும். முதல்வரின் உத்தரவை ஏற்று மாநகரின் பிற பகுதிகளிலும் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பானது திடீர் மழையின் காரணமாக ஏற்பட்ட மின் பளு மாறுபாடு மற்றும் தொழில்நுட்ப காரணமாக இருக்கலாம்.

தளவாட பொருட்களின் கொள்முதலைப் பொறுத்தவரை இந்த ஆட்சியில் தரத்தில் எந்தவித சமரசமும் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த பாதிப்புகளை சரிசெய்ய தேவையான அனைத்தையும் உடனடியாக அளித்து மின்சார வினியோகத்தை சீரமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சார வினியோகத்தை சீரமைக்க தேவையான அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்கான ஒப்பந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

போர்க்கால அடிப்படையில் பணிகள்

பின்னர், மடிபாக்கம் ராம்நகர் பகுதியில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான மின்பாதைகள் மற்றும் மின்கம்பிகளை சாலையின் ஓரமாக நகர்த்தும் பணியினை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்தபணிகளை போர்கால அடிப்படையில் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். உடன் சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. ச.அரவிந்த் ரமேஷ் உடன் இருந்தார்.


Next Story