ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்த போது தவறி விழுந்து காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சுற்றுலா பயணியை பரிசல் ஓட்டிகள் மீட்டனர்


ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்த போது தவறி விழுந்து காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சுற்றுலா பயணியை பரிசல் ஓட்டிகள் மீட்டனர்
x
தினத்தந்தி 8 Aug 2023 1:00 AM IST (Updated: 8 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணி மது போதையில் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி சென்ற போது நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். அவரை அப்பகுதியில் மீன் பிடிப்பவர்கள், பரிசல் ஒட்டிகள், எண்ணெய் தேய்க்கும் மசாஜ் தொழிலாளர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சுற்றுலா பயணி

தமிழகத்தின் பிரதான சுற்றுலாத்தலமான ஒகேனக்கலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்வர். கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மெயின் அருவியின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்ததால், மறுபகுதி மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த மெய்யரசன் (வயது 35) என்ற சுற்றுலா பயணி வந்திருந்தார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, அருவியின் பாதுகாப்பு கம்பிகளின் மீது ஏறிய போது நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

மீட்பு

தொங்கு பாலத்தின் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பரிசல் ஓட்டிகள் மசாஜ் செய்பவர்கள், சுற்றுலாப்பயணி காவிரி ஆற்றில் அடித்து வருவதை கண்டதும் உடனடியாக அவரை மீட்டு கரையோரப் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை சிகிச்சைக்காக ஊட்டமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story