குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது


குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது
x

குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

திருச்சி

துறையூர்:

ஏரி நிரம்பி வழிந்தது

துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதேபோல் பச்சைமலை பகுதியிலும் கன மழை பெய்தது. இதனால் மலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அந்த தண்ணீர் மலை வழியாக கீரம்பூர் செங்காட்டுப்பட்டி ஏரியை வந்தடைந்தது. இதையடுத்து அங்கிருந்து துறையூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

அந்த ஏரி நிரம்பி வழிந்த நிலையில், வெள்ள நீரானது குடியிருப்பு பகுதிகளாக பாலக்கரை பெருமாள் கோவில் தெரு, கீழ குத்தி தெரு, மேல குத்தி தெரு, தெப்பக்குளம் ஆகிய பகுதிகளை சூழ்ந்தது. இதில் தெப்பக்குளம் நிறைந்து வெளியேறிய தண்ணீர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

இது பற்றி தகவல் அறிந்த துறையூர் நகராட்சி ஊழியர்கள், ஒரு சில இடங்களில் மட்டுமே முன்னேற்பாடு மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஒரு சில இடங்களில் வீடுகளில் நள்ளிரவில் தண்ணீர் முழுவதும் உட்புகுந்தது. தண்ணீருடன் பாம்பு, தேள் மற்றும் விஷ ஜந்துக்களும் வீடுகளுக்குள் புகுந்ததால் இரவு முழுவதும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை முழுமையாக மேற்கொள்ளவில்லை என்று நகராட்சி ஊழியர்கள் மீது புகார் கூறினர்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

துறையூர் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், ஆங்காங்கே கழிவுகளும் குவிந்துள்ளது. துறையூர் பஸ் நிலையம், திருச்சி சாலையில் உள்ள சின்ன பாலம், பாலக்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, ேநாய் பரவும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரியில் வீசப்பட்ட குப்பைகள்

துறையூரில் பெரிய ஏரியில் இருந்து வெள்ளநீர் வெளியேறி கடைக்கால் வழியாகவும், சின்னப்பாலம் வழியாகவும் சென்று சின்ன ஏரியை அடைந்து, அங்கிருந்து வெளியேறுகிறது. அங்கு வெள்ள நீருடன் மரக்கட்டைகளும், குப்பைகளும் அடித்து வரப்பட்டது. மேலும் துறையூர் நகராட்சி ஊழியர்கள், ஏற்கனவே மலைபோல் குவிந்திருந்த குப்பைகளை வெள்ளநீரில் கொட்டினர். இதனால் துறையூரில் உள்ள சின்ன ஏரி முழுவதும் குப்பைகளால் நிரம்பி உள்ளது. நகராட்சி ஊழியர்களே பொறுப்பற்ற நிலையில் குப்பைகளை அதிகாரிகள் முன்பு ஏரியில் வீசியது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நகராட்சி ஊழியர்களே ஏரியில் கழிவுகளை கொட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவுகிறது.


Next Story