ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ. 6 லட்சம் நகை, ரொக்கம் திருட்டு


ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ. 6 லட்சம் நகை, ரொக்கம் திருட்டு
x

பேரணாம்பட்டு அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர்.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர்.

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள ராஜக்கல் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 65). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மனைவியை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு சிகிச்சை முடிந்ததும் இரவு வீடு திரும்பிய போது கேட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்றபோது பீரோவிலிருந்த ரூ.5½ லட்சம் 14½ பவுன் நகைகள் மற்றும் ரூ 90 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.

இது குறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் காந்தி புகார்அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

சுவர் ஏறி குதித்துள்ளனர்

கை ரேகை மற்றும் தடவியல் நிபுணர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சிம்பா திருட்டு நடைபெற்ற வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. எனவே அங்கிருந்து வாகனத்தில் தப்பியிருக்கலாம் என தெரிகிறது.

மேலும் வெளிகேட்டின் பூட்டு உடைக்கப்படாமல் இருந்ததால் மர்மநபர்கள் சுவர் ஏறி குதித்து கைவரிசை காட்டியுள்ளனர்.

இது குறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்சம்பவம்

கடந்த 25-ந் தேதி பேரணாம்பட்டு அருகே எம்.வி.குப்பம் பகுதியில் பாதிரியார் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து ரூ 12 லட்சம் மதிப்புள்ள நகை, மற்றும் பணம் திருட்டு போன பரபரப்பு அடங்குவதற்குள் இப்போது ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிலும் பட்டப்பகலில் திருட்டு நடந்துள்ளது. தொடர் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Next Story