தடையை மீறி புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டம்:என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரிக்கை


தடையை மீறி புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டம்:என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி மும்முடிச்சோழகன் கிராமத்தில் தடையை மீறி புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

கம்மாபுரம்,

சேத்தியாத்தோப்பு அடுத்த மும்முடிச்சோழகன் கிராமத்தில் என்.எல்.சி.யின் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் நிலம் கொடுத்தவர்களுக்கு 2000 ஆண்டு முதல் தற்போது வரை அனைவருக்கும் சமமான இழப்பீடு வழங்க வேண்டும். வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மேற்கு மாவட்டம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மும்முடிசோழகன் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி புரட்சி பாரதம் கட்சி சார்பில் மும்முடிச்சோழகன் ஊராட்சியில் உள்ளிருப்பு தொடர் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ராஜகீர்த்தி தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர் தெய்வசிகாமணி, மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் கிராமத்து மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், நில எடுப்பு அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story