பருவமழையின் போது மூழ்கும் அபாயம்: சாலையின் உயரத்தை அதிகரித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


பருவமழையின் போது மூழ்கும் அபாயம்: சாலையின் உயரத்தை அதிகரித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x

பருவமழையின் போது மூழ்கும் அபாயம் உள்ளதால் சாலையின் உயரத்தை அதிகரித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்துகாணி கிராமம் பக்கிங்காம் கால்வாய்க்கு அருகே உள்ள குறுகிய கிராமம் ஆகும். இந்த பகுதியில் 150 பழங்குடி இருளர்கள் மற்றும் முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி இல்லாத நிலையில் கல்பாக்கம் நகரிய பகுதிக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பக்கிங்காம் கால்வாய் நீரை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி மக்கள் பக்கிங்காம் கால்வாயை கடந்து செல்ல தமிழக அரசு சார்பில் குறைந்த உயரத்தில் தரமற்ற முறையில் தார் சாலை அமைத்து கொடுக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் பருவ மழையால், சாலைகள் சிதிலமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. குறைந்த உயரத்தில் இந்த சாலை அமைக்கப்பட்டதால் மழை காலங்களில் 3 அடி உயரத்திற்கு மூழ்குகிறது. இதனால் அருகில் உள்ள கல்பாக்கம் பகுதிக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் மக்கள் மூழ்கடிக்கப்பட்ட சாலை வழியாகதான் படகிலோ அல்லது இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.

இந்த பகுதியில் வசிக்கும் கூலி வேலை செய்யும் பழங்குடி இருளர்களின் குழந்தைகள் மழை காலங்களில் கல்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்ல கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். சாலை சரியில்லாத காரணத்தால் ஷேர் ஆட்டோக்களும் இந்த பகுதியில் இயக்கப்படுவதில்லை. இந்த சாலையில் செல்லக்கூடியவர்களின் வாகனங்கள் அடிக்கடி பழுதடைகிறது. கடந்த 2021-ம் ஆண்டு இந்த சாலையை 3 அடி உயரத்திற்கு உயர்த்தி சீரமைக்க அரசு சார்பில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து திட்டமதிப்பீடு தயாரித்து சென்றதோடு சரி, பின்னர் அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது இன்னும் 3 அல்லது 5 நாட்கள் மழை பெய்தால் நீர்வரத்து அதிகரித்து இந்த சாலை மூழ்கும் அபாயம் உள்ளது. ஆகவே பழுதடைந்த இந்த சாலையை 3 அடி உயரத்திற்கு உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story