தொடரும் விபத்துக்களை தடுக்க கந்தம்பாளையம் பிரிவு சாலைகளில் தகவல் பலகை, வேகத்தடை அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
தொடரும் விபத்துக்களை தடுக்க கந்தம்பாளையம் பிரிவு சாலைகளில் தகவல் பலகை, வேகத்தடை அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் பகுதியில் தொடர் விபத்துக்களை தடுக்க பிரிவு சாலைகளில் தகவல் பலகை, வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
அடிக்கடி விபத்து
நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு அருகே உள்ள கரட்டுப்பாளையம் வரை சுமார் 26 கி.மீட்டர் தூரத்திற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2015-ம் ஆண்டு தார்சாலை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியது. இந்த பணி கடந்த 2018-ம் ஆண்டு முடிக்கப்பட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக பரமத்தி முதல் திருச்செங்கோடு இடையே உள்ள 15 கி.மீட்டர் தூரத்தில் கந்தம்பாளையம் பிரதான சாலையாக உள்ளதால் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த சாலையில் சென்றால் சுங்க கட்டணத்தை தவிர்க்க முடியும் என்பதால் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
இந்த நிலையில் பிரதான சாலையின் இடையே கிராமங்களுக்கு செல்லும் பிரிவு சாலைகளில் எச்சரிக்கை மின்விளக்குகள் இல்லாததாலும், வேகத்தடைகள் இல்லாத காரணத்தாலும் சாலையை கடக்க முயலும் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் அடிக்கடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகி விடுகின்றனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
24 பேர் சாவு
இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் இடங்களை நேரில் வந்து ஆய்வு செய்து உள்ளனர். இந்த ஆய்வின்போது மாவுரெட்டி பஸ் நிறுத்தம், நல்லூர் மாரியம்மன் கோவில், 4 ரோடு பிரிவு, கந்தம்பாளையம் பஸ் நிறுத்தம், மணியனூர் 3 ரோடு பிரிவு ஆகிய இடங்களில் அதிகமான விபத்துக்கள் நடந்து உயிரிழப்பு நடைபெற்று வருவது தெரியவந்து உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டில் இதுவரை சுமார் 21 மாதங்களில் மட்டும் நல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 24 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி இறந்து உள்ளனர். 52 பேர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து உள்ளனர். எனவே பிரிவு ரோடுகளை கணக்கீடு செய்து ஒளிரும் மின்விளக்குகள், தகவல் பலகை, வேகத்தடைகள் அமைக்க வேண்டும். இதனால் வரும் காலங்களில் பல மனித உயிர்களை காப்பாற்ற முடியும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
விபத்து சிகிச்சை பிரிவு
இதுகுறித்து சமூக ஆர்வலர் என்.எஸ்.ரங்கசாமி கூறியதாவது:-
பரமத்தி முதல் திருச்செங்கோடு வரை சாலை விரிவுபடுத்திய பின்பு வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. அதுவும் அதிவேகமாக செல்கின்றன. தார்சாலையை கடந்து செல்பவர்கள் வேகமாக வரும் வாகனத்தை சரியாக கணித்து செல்ல தவறி விடுகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி செல்வது அதிகமாகி விட்டதால் விபத்து நடக்க ஒரு காரணமாக உள்ளது. அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதியை கண்காணித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். நல்லூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபத்து சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
ஒளிரும் மின்விளக்குகள்
இதுகுறித்து கந்தம்பாளையம் என்ஜினீயர் கோபிநாத் கூறியதாவது:-
கந்தம்பாளையம் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் பிரிவு சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தார்சாலையை கடக்கும் முயலும் நபர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். ஆகவே அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பிரிவு ரோடுகளை கணக்கீடு செய்து ஒளிரும் மின்விளக்குகள், வேகத்தடைகள் அமைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் விபத்துகளை குறைத்து, மனித உயிர்களை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.