தஞ்சை மாவட்டத்தில் 15 இடங்களில் சாலை மறியல்


தஞ்சை மாவட்டத்தில் 15 இடங்களில் சாலை மறியல்
x

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகஅரசை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 15 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,260 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகஅரசை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 15 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,260 பேரை போலீசார் கைது செய்தனர்.

எல்.ஐ.சி. அலுவலகம் முற்றுகை

காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் தஞ்சை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நேற்று நடந்தது.இந்தநிலையில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதில் அரசியல் கட்சியினர், வணிகர்கள், விவசாயிகள், விவசாய சங்கத்தினர், மகளிர் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் காந்திஜி சாலை வழியாக சென்று எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. பின்னர் எல்.ஐ.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன் சாலையில் அமர்ந்தும் கர்நாடகஅரசு, மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பல்வேறு கட்சிகள்

இந்த போராட்டத்தில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கோ.அன்பரசன், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் பழனியப்பன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், ஏ.ஐ.டி.யூ.சி. தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுல்லாவுதீன், கூட்டியக்க நிர்வாகிகள் கண்ணன், செந்தில்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநகர செயலாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த போராட்டம் காரணமாக 1 மணிநேரத்திற்கு காந்திஜிசாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் எல்லாம் இயக்கப்பட்டன. பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரா, சுதா, ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் காய்கனி வியாபாரிகள் கடைகளை அடைத்து தங்கராசு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1,260 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருப்பனந்தாள், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், அம்மாப்பேட்டை, செங்கிப்பட்டி, வல்லம், மதுக்கூர், பேராவூரணி, மெலட்டூர், ஒரத்தநாடு, சுவாமிமலை, திருவையாறு, நாச்சியார்கோவில், திருவிடைமருதூர், திருவோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்தியஅரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், முற்றுகை போராட்டமும் நடந்தது. மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 1,260 பேரை போலீசார் கைது செய்தனர். 13 இடங்களில் மத்தியஅரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இதில் 1250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.


Next Story