நடையனூர் பகுதியில் சாலை சீரமைப்பு பணி: வாகன ஓட்டிகள் அவதி


நடையனூர் பகுதியில் சாலை சீரமைப்பு பணி: வாகன ஓட்டிகள் அவதி
x

நடையனூர் பகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கரூர்

தடுப்புகள் அமைப்பு

கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலை முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பழுதடைந்த தார் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சுமார் 3 மாதத்திற்கும் மேலாக இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வேலாயுதம்பாளையம்- நடையனூர் வரை கடந்த 4 நாட்களாக பழுதடைந்த தார் சாலையை சீரமைத்து புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு கந்தம்பாளையம் பகுதியில் தார் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் அமைத்து எந்த வாகனமும் அந்த வழியாக செல்ல முடியாதபடி அடைத்து விட்டனர். இதனால் இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், பாரம் ஏற்றி செல்லும் லாரிகள், டிராக்டர்கள் உள்பட எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியவில்லை.

கால தாமதம்

இதனால் கொடுமுடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் நொய்யல் குறுக்குச்சாலையில் இருந்து புன்னம்சத்திரம் வழியாக வேலாயுதம்பாளையம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல் சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம் சத்திரம் சென்று நொய்யல் குறுக்குச்சாலை வழியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பகுதியிலிருந்தும் வந்த அனைத்து வாகனங்களும் வெகுதூரம் சென்று குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மிகவும் காலதாமதமாக வாகனங்கள் செல்ல வேண்டி இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

கோரிக்கை

கந்தம்பாளையம் முதல் நொய்யல் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரி பஸ்கள் வராததால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலையின் ஒரு புறமாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story