காவிரி ஆற்றில் பரிசல் பயணத்திற்குகூடுதல் கட்டண வசூலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஏரியூர்:
காவிரி ஆற்றில் பரிசல் பயணத்திற்கு கூடுதல் கட்டண வசூலை கண்டித்து நாகமரையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவிரி நீர்த்தேக்கம்
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரி- சேலம் மாவட்ட எல்லையை கடந்து செல்ல மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடக்க வேண்டி உள்ளது. இந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடந்து செல்வதற்காக, ஒட்டனூர்-கோட்டையூர் இடையே ஒரு கட்டண பரிசல் பயணமும், நாகமரை- பண்ணவாடி இடையே மற்றொரு கட்டண பரிசல் பயணம் உள்ளது. இதை பயன்படுத்தி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதிக்கு தினமும் காவிரி ஆற்றை கடந்து பரிசலில் சென்று வருகின்றனர். இதற்காக கட்டணம் தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் இருந்தது.
சாலை மறியல்
காவிரி ஆற்றை கடக்க தற்போது தனி நபருக்கு 20 ரூபாய் எனவும், இரு சக்கர வாகனத்திற்கு 40 ரூபாய் எனவும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வை கண்டித்து இப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை நாகமரையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பரிசலை காவிரி கரையில் கட்டி வைத்து, இயக்காமல் தடுத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, தாசில்தார் சவுகத்அலி மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த ஒரு மாதத்திற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.