வேலகவுண்டம்பட்டியில் துணிகரம்:நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.1¾ லட்சம் பறிப்பு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பரமத்திவேலூர்:
வேலகவுண்டம்பட்டியில் பட்டப்பகலில் நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.1.75 லட்சத்தை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிதி நிறுவன உரிமையாளர்
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மன்னன்காடு பகுதியை சேர்ந்தவர் நல்லையன் (வயது 72). இவர் வேலகவுண்டம்பட்டியில் உள்ள வையப்பமலை பிரிவு சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் நிதி நிறுவனத்துக்கு வந்த பெருப்பாளிப்பட்டியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் நல்லையனிடம் ரூ.2 லட்சம் கடன் கேட்டார்.
அப்போது பணம் குறைவாக இருந்ததால் நல்லையன், அவருடைய நண்பர் சின்னசாமி ஆகியோர் வேலகவுண்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு வங்கிக்கு சென்றனர். பின்னர் அங்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை பெற்று ஒரு பையில் எடுத்து கொண்டு அப்பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
வலைவீச்சு
அப்போது பின்னால் அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென நல்லையன் கையில் வைத்திருந்த பையை பறித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து நல்லையன் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன உரிமையாளரிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






