நிதி நிறுவன பெண் ஊழியரிடம் வழிப்பறி
சேலத்தில் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓட்டம் பிடித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலத்தில் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓட்டம் பிடித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நிதி நிறுவன ஊழியர்
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அழகாபுரம் பகுதியில் நிதி நிறுவனத்திற்கு வரவேண்டிய தொகைகளை வசூலித்து கொண்டிருந்தார்.
அப்போது ஒருவரிடம் பணம் வசூல் செய்து விட்டு அந்த பணத்தை எண்ணி சரிபார்த்து கொண்டிருந்தார். அந்த வழியாக வாலிபர் ஒருவர் நடந்து வந்தார்.
வழிப்பறி
அவர், கண் இமைக்கும் நேரத்தில் மகேஸ்வரியின் கையில் இருந்த ரூ.5 ஆயிரத்து 200-ஐ பறித்தார். மேலும் மகேஸ்வரியின் செல்போனை பிடுங்கி தரையில் எறிந்து விட்டு மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தார். மகேஸ்வரி திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த நபரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ெபாதுமக்கள் அச்சம்
வழிப்பறியில் ஈடுபட்ட நபர் நடந்து வந்துள்ளார். எனவே அவர், அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கிச்சிப்பாளையம் பகுதியில் பட்டப்பகலில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதாகவும், இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.