கோவில் கதவை உடைத்து ரூ.54 ஆயிரம்-நகை கொள்ளை


கோவில் கதவை உடைத்து ரூ.54 ஆயிரம்-நகை கொள்ளை
x

திருக்குவளை அருகே கோவில் கதவை உடைத்து ரூ.54 ஆயிரம், 4 கிராம் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே கோவில் கதவை உடைத்து ரூ.54 ஆயிரம், 4 கிராம் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீரமாகாளியம்மன் கோவில்

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே மேலவாழக்கரையில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருக்குவளை சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்த சோமாஸ்கந்தன் என்பவர் பூசாரியாக வேலைபார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் கோவிலில் பூஜை செய்துவிட்டு நேற்று இரவு கோவிலின் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை அந்த பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்க வந்த பொதுமக்கள் கோவிலின் கதவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கோவில் நிர்வாகியிடம் கூறினர். உடனே அவர் இதுகுறித்து திருக்குவளை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

பணம்-நகை கொள்ளை

அதன் பேரில் திருக்குவளை போலீசார், கோவிலுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கோவில் கதவு மற்றும் கோவிலுக்குள் உள்ள பீரோ உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவில் இருந்த ரூ.54 ஆயிரம், 4 கிராம் தாலி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. மேலும் அங்கு உள்ள உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

வலைவீச்சு

இதையடுத்து நாகையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story