கடும் வெயிலால் செடிகளிலேயே அழுகிய தக்காளிகள்


கடும் வெயிலால் செடிகளிலேயே அழுகிய தக்காளிகள்
x
தினத்தந்தி 16 Oct 2023 7:45 PM GMT (Updated: 16 Oct 2023 7:46 PM GMT)

கிணத்துக்கடவு பகுதியில் கடும் வெயிலால் செடிகளிலேயே தக்காளிகள் அழுகின. அவற்றை சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டிச்சென்றனர்.

கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு பகுதியில் கடும் வெயிலால் செடிகளிலேயே தக்காளிகள் அழுகின. அவற்றை சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டிச்சென்றனர்.


தக்காளி சாகுபடி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையை நம்பி விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதன் காரணமாக குறைந்த பரப்பளவிலேயே விவசாயிகள் தக்காளி பயிரிட்டு இருந்தனர். மேலும் அந்த செடிகளை பாதுகாக்க சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.

கடும் வெயில்

இந்த நிலையில் தற்போது அந்த செடிகளில் தக்காளி விளைச்சல் தொடங்கியுள்ளது. ஆனால் பருவமழை சரிவர பெய்யாமல் அவ்வபோது கடும் வெயிலும் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் செடிகள் காய்ந்து வருகின்றன. மேலும் தக்காளிகள் வெம்பி அழுகி வீணாகி வருகின்றன.

அந்த தக்காளிகளை விவசாயிகள் பறித்து, கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். மேலும் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளதால், அவர்கள் கவலை அடைந்து இருக்கின்றனர்.

அறிவுரை

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தக்காளி செடிகளுக்கு கம்பி கட்டாமல் விவசாயிகள் விட்டு உள்ளனர். அந்த செடிகளின் காய்கள் தரையில் பட்டதால், வெயிலில் வெம்பி அழுகி உள்ளது. கம்பி கட்டி இருந்தால், அந்த பாதிப்பை தடுத்து இருக்கலாம். இது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம் என்றனர். வெயில்



Next Story