சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கீடு


சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கீடு
x
தினத்தந்தி 14 Feb 2024 4:46 AM GMT (Updated: 14 Feb 2024 4:56 AM GMT)

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கு ஆர்.பி. உதயக்குமாரை நியமித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

எதிர்க்கட்சி துணை தலைவருக்கான இருக்கை எதிர்க்கட்சி தலைவரின் இருக்கை அருகிலேயே இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விஷயத்தில் சபாநாயகர் அப்பாவு எந்த முடிவும் எடுக்காமல் பிடிவாதமாக இருக்கிறார். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் அருகருகே இருக்க வேண்டும். இதுதான் மரபு. இதை பல முறை கோடிட்டு காட்டியும் சபாநாயகர் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சட்டசபையில் தெரிவித்தார். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்

இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு, 2வது வரிசையில் முன்னாள் பேரவைத் தலைவர் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Next Story