சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 3 பேர் கைது


சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 3 பேர் கைது
x

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இலங்கை, குவைத், அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 34 லட்சத்து 96 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 516 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இலங்கையில் இருந்து சென்னை வந்த இலங்கை வாலிபரை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.49 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 919 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதைபோல் குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தபோது ரூ.43 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 805 கிராம் தங்க வளையள்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அபுதாபியில் இருந்து சென்னை வந்த ஒரு வாலிபரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.42 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 792 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 34 லட்சத்து 96 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 516 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை வாலிபர் உள்பட 3 பேரை கைது செய்து இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story