என்ஜினீயர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை-பணம் கொள்ளை
கோவை நீலிகோணாம்பாளையத்தில் என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கோவை, ஜூன்.14-
கோவை நீலிகோணாம்பாளையத்தில் என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
என்ஜினீயர்
கோவை நீலிகோணாம்பாளையம் அண்ணாநகரில் வசிப்பவர் அமர்நாத் சிங் (வயது 52), என்ஜினீயர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு பன்சிபாய் என்ற மனைவியும், ஸ்ரீராம் கார்த்திக் என்ற மகனும், ஸ்ரீநிதி என்ற மகளும் உள்ளனர். அமர்நாத்சிங் லேத்பட்டறை நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் மகள், மகனுடன் பாப்பம்பட்டியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார். இவர்கள் மறுநாள் வீட்டிற்கு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 34 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
இதையடுத்து அமர்நாத்சிங் உடனடியாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார், தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். மர்ம நபர்களின் கைரேகை உள்ளிட்ட தடயங்கள் பதிவாகி உள்ளதா என்பது குறித்து கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தனர்.
கண்காணிப்பு கேமரா
மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் எதுவும் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதிகாலை 3 மணிக்கு இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருட்டு குற்றங்கள் அதிகரிப்பு
கோவையில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை ராமநாதபுரம், சுங்கம், பீளமேடு உள்பட நகரின் பல பகுதிகளில் 200-பவுனுக்கு மேல் திருட்டு போய் உள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. எனவே இந்த தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் தான் மீண்டும் அந்த வீட்டில் கொள்ளையத்து உள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கோவையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.15 லட்சம் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.