நெல்லையில் மிளகாய் பொடி தூவி ரூ.1.50 கோடி கொள்ளையடித்த விவகாரம் - தனிப்படை போலீசார் அதிரடி
நெல்லை தனிப்படை போலீசார், கேரள மாநிலம் மூணாறில் வைத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
களக்காடு,
நெல்லை மாவட்டம் டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 30ந்தேதி காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் 2 உதவியாளர்களுடன் சென்றுள்ளார்.
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரெயில்வே மேம்பாலத்தில் வரும்போது திடீரென 2 கார்களிலும் வந்த முகமூடி கும்பல் சுஷாந்தின் காரை வழிமறித்து நிறுத்தி அவர் மீது மிளகாய் பொடிதூவி கம்பியால் தாக்கியுள்ளனர். பின்னர் காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.1.50 கோடியை திருடிச்சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வந்தது. இதனிடையே, குற்றவாளிகள் கேரள மாநிலம் மூணாறில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, தனிப்படை போலீசார் 2 கொள்ளையர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மேலும் சிலர் கைதுசெய்யப்பட உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.