ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.16 லட்சம் நகை, பணம் கொள்ளை


ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.16 லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:46 PM GMT)

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

விழுப்புரம்

விழுப்புரம்

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை திருநகர் விரிவாக்கம் அரவிந்தர் தெரு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம்(வயது 63). ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் தனது சகோதரர் மகனுக்கு பெண் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பொய்யப்பாக்கம் சென்றார்.

பின்னர் அங்கிருந்து மாலையில் புறப்பட்டு ஊருக்கு வந்த சோமசுந்தரம் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

42 பவுன் நகைகள் கொள்ளை

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது யாரோ மர்மநபர்கள் உள்ளே புகுந்து 2 பிரோக்களை உடைத்து அதில் இருந்த 42 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.

பின்னர் இதுகுறித்து சோமசுந்தரம் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தொடர்ந்து, போலீஸ் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அங்குள்ள மெயின்ரோடு வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீ்ட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story