சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் குறுவட்டம், பாலாமடை கிராமத்திலிருந்து திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டை நோக்கி கடந்த 22-4-2023 அன்று வேனில் சென்றபோது தேனி மாவட்டம், போடிமெட்டு அருகே உள்ள தோன்றிமலை என்னுமிடத்தில் அவர்கள் சென்ற வேன் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதில் கல்குறிச்சியைச் சேர்ந்த வள்ளியம்மாள், க/பெ.செல்லத்துரை (வயது 70), மேலப்பாலாமடையைச் சேர்ந்த ஜானகி, க/பெ. ஆறுமுகம் (வயது 65), பாலாமடை, இந்திரா நகரைச் சேர்ந்த பெருமாள், த/பெ.செல்லையா (வயது 58), கொடியங்குளத்தைச் சேர்ந்த சுதா (வயது 25), கல்குறிச்சியைச் சேர்ந்த சுசிந்திரன், த/பெ. சுடர்ஒளி (வயது 8), மற்றும் சுரேந்திரன், த/பெ.சுடர்ஒளி (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் சீதாலெட்சுமி, க/பெ.சுடர்ஒளி மற்றும் இந்திராணி, க/பெ.பெருமாள் ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.