மின்வாரியத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - சீமான்


மின்வாரியத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - சீமான்
x

மின்வாரியத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பேரூர் கிராமத்தில் சரிசெய்யப்படாமல் அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி அன்புத்தம்பி பெரியசாமி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பி பெரியசாமியை இழந்து பெருந்துயரத்திற்குள்ளாகியுள்ள அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது குறித்து புகாரளித்தும் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், விரைந்து சரி செய்வதற்கான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாத தமிழ்நாடு மின்வாரியத்தின் அலட்சியப்போக்கே தம்பி பெரியசாமி மின்விபத்துக்குள்ளாகி உயிரிழக்க முதன்மைக் காரணமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு தம்பி பெரியசாமியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்று இரண்டு குழந்தைகளோடு தவிக்கும் பெரியசாமியின் மனைவிக்கு அரசு வேலையும், 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story