மெட்ரோ ரெயிலில் இதுவரை ரூ.278 கோடி வருவாய் - பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்
பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் இறங்கியுள்ளது.
சென்னை,
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவையை அன்றாடம் சுமார் 1.7 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது ரூ.22,149 கோடி செலவில் 54.1 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டது.
இதில் விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை ஒரு தடத்திலும், சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் பரங்கிமலை வரை இன்னொரு தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக முதலில் ரூ.18,380 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் இணைப்புத் திட்டத்திற்காக மேலும் ரூ.3,770 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் படிப்படியாக பயன்பாடு அதிகரித்து வழக்கமான நிலைமை திரும்பியது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 3 கோடியே 1 லட்சத்து 15 ஆயிரத்து 886 பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.
வருவாயை பொறுத்தவரை 2019-20ம் நிதியாண்டில் 119.25 கோடி ரூபாயும், 2020-21ம் நிதியாண்டில் 30.08 கோடி ரூபாயும், 2021-22ம் நிதியாண்டில் 85.34 கோடி ரூபாயும் 2022 ஜூன் 30 வரை 44.25 கோடி ரூபாயும் என மொத்தமாக 278.92 கோடி ரூபாய் மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் இறங்கியுள்ளது. இதற்காக ஒப்பந்த முறையில் ஆலோசகர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் நகரம் மற்றும் புறநகரின் பெரும்பாலான பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் பயணிகளின் எண்ணிக்கையும், வருவாயும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.