ரூ.29 லட்சம் பண மோசடி புகார்: 'சட்டப்படி சந்திப்போம்' என ஏ.ஆர்.ரகுமான் தரப்பு பதிலடி


ரூ.29 லட்சம் பண மோசடி புகார்: சட்டப்படி சந்திப்போம் என ஏ.ஆர்.ரகுமான் தரப்பு பதிலடி
x

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது ரூ.29 லட்சம் பண மோசடி புகார் அளிக்கப்பட்டது. ‘இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம். விரைவில் வழக்கு தொடர போவதாகவும் ஏ.ஆர்.ரகுமான் தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.

சென்னை,

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் அமைப்பு செயலாளர் கே.விநாயக் செந்தில், பொருளாளர் கே.விவேகானந்தா சுப்பிரமணிய நாதன் ஆகியோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

இசை நிகழ்ச்சி நடத்த...

சென்னையில் கடந்த 2018-ம் ஆண்டு தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டோம். இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அவரை அணுகினோம். இந்த இசை நிகழ்ச்சிக்காக ரூ.29.5 லட்சம் முன்தொகையாக கொடுத்தோம். ஆனால் நிகழ்ச்சி நடத்தவும், இட அனுமதியும் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை.

எனவே, முன்தொகையை திரும்ப தரும்படி அவருக்கு கடிதம் அனுப்பினோம். ஏ.ஆர்.ரகுமான் அதற்கு ஒத்துக்கொண்டு, அந்த தொகைக்கான பின் தேதியிட்ட ஒரு காசோலையை எங்களுக்கு கொடுத்தார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லையென அந்த காசோலை திரும்ப வந்துவிட்டது. நாங்கள் கொடுத்த பணத்தை தரும்படி கடந்த 5 ஆண்டுகளாக ஏ.ஆர்.ரகுமானிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், இதுவரை எங்கள் பணம் திருப்பி தரப்படவில்லை. எனவே, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்து

இந்த குற்றச்சாட்டை ஏ.ஆர்.ரகுமான் தரப்பினர் மறுத்துள்ளனர். இதுகுறித்து அவரது செயலாளர் செந்தில் வேலவன் கூறியதாவது:-

2018-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக எங்கள் நிறுவனத்தை இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் தொடர்பு கொண்டார்கள்.

நாங்கள் ஏ.ஆர்.ரகுமானிடம் பேசி அனுமதி பெற்றோம். இதன்பின் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தோம். அப்போது ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்காக அவரின் பெயரில் ரூ.25 லட்சமும், இதர கலை நிகழ்ச்சிக்காக ரூ.25 லட்சமும் என 2 காசோலைகளை அவர்கள் வழங்கினர்.

அப்போது நடந்த பேச்சுவார்த்தையிலும், அதனைத்தொடர்ந்து போடப்பட்ட உடன்படிக்கையிலும் 'நீங்களாகவே நிகழ்ச்சிகளை நிறுத்தினால் அல்லது ரத்து செய்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முன் பணம் திரும்பி தரப்படாது', என குறிப்பிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில் நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்தால் முன்பணம் திரும்பி வழங்க தேவையில்லை என்ற நிபந்தனையோடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பெயரை கெடுக்கும் முயற்சி

இந்தநிலையில் இசை நிகழ்ச்சியை அந்த அமைப்பால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே அவர்கள் இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இருந்த போதிலும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் காசோலை அந்த அமைப்புக்கு திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. ஒப்பந்தத்தை மீறியும் பணம் தரமுடியுமா? என்று கேட்டனர். அப்போது நட்பு ரீதியில் இரக்கப்பட்டு அடுத்த நிகழ்ச்சியில் முடிந்த உதவி செய்வதாக தெரிவித்தேன்.

அந்த அமைப்பினரே இசை நிகழ்ச்சி ரத்து செய்த நிலையிலும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட காசோலை திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. இதனால் ஏ.ஆர். ரகுமானுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த நிலையில் தேவையில்லாமல் ஏ.ஆர்.ரகுமானின் பெயரை கெடுக்கும் நோக்கில் இந்த புகாரில் அவரது பெயரை இணைத்துள்ளனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில், கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட முன் தொகை திருப்பி வழங்க தேவையில்லை. எங்கள் மீது கொடுக்கப்பட்ட புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம். மேலும் அந்த சங்கம் மீது விரைவில் வழக்கு தொடரவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த சிக்கல்

ஏற்கனவே இசை நிகழ்ச்சி நடத்திய விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் ஏ.ஆர்.ரகுமான் மனம் நொந்து போனார். தான் பலியாடு ஆகிவிட்டதாகவும் சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இன்னொரு புதிய பிரச்சினை 5 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானுக்கு தலைவலியை கொடுத்துள்ளது.

1 More update

Next Story