கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி; மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ரூ.4 லட்சம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதி அளிக்கப்படுகிறது. அவர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டி கொள்ள நிதி உதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் 5 பேருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை முதல்-அமைச்சர் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு விண்ணப்பிக்க நல வாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். தகுதியான கட்டுமான தொழிலாளி சொந்த வீட்டுமனை வைத்து இருந்தால் 300 சதுர அடி அல்லது 28 சதுர மீட்டர் அளவில் வீடு கட்டுவதற்கான இடவசதி இருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஏற்கனவே கட்டுப்பட்டு உள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பம்
பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளிக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது. வேறு எந்த மத்திய, மாநில அரசு சார்ந்த இலவச வீட்டு வசதி திட்டத்தில் பயன் பெற்றிருக்கக்கூடாது. கட்டுமான தொழிலாளியின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
சொந்தமாக வீடு கட்டி கொள்ள உள்ள தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா, பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினருடன் இணைந்த பட்டாவாகவோ வில்லங்கம் இல்லாமல் இருக்க வேண்டும். நிலத்தின் உரிமைக்கான பட்டா முறையாக பெற்றிருக்க வேண்டும்.
தகுதியான தொழிலாளர்கள் வாரிய உறுப்பினர் பதிவு அட்டை, ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஒரு புகைப்படம், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.