அரசு ஊழியர் வீட்டில் ரூ.4½ லட்சம் நகை- பணம் கொள்ளை


அரசு ஊழியர் வீட்டில் ரூ.4½ லட்சம் நகை- பணம் கொள்ளை
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே அரசு ஊழியர் வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி தாலுகா வாதானூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 55). இவர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 8-ந் தேதி மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சொந்த வேலை காரணமாக புதுச்சேரிக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வாதானூருக்கு வந்தனர்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ரங்கராஜ், கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4½ லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story