திருமணத்துக்கு பெண் தேடிய முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.4 லட்சம் மோசடி
திருமணத்துக்கு பெண் தேடிய முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
திருச்சி:
முன்னாள் ராணுவ வீரர்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது திருச்சி மாவட்டம் நவல்பட்டு துப்பாக்கி தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் செல்வத்துக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரிவர பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.
இதையடுத்து செல்வம் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் ஆன்லைன் திருமண தகவல் தொடர்பு மையத்தில் பதிவு செய்து பெண் தேடியுள்ளார். அப்போது செல்வத்தை ஆன்லைனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தான் பெங்களூருவை சேர்ந்தவர் என்றும், தற்போது உக்ரைன் நாட்டில் செவிலியராக பணியாற்றி வருவதாகவும், விரைவில் நாம் சந்திக்கலாம் என்றும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
உக்ரைனில் செவிலியர்
மேலும், உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் செல்போனில் பேச முடியாது என்றும், இ-மெயிலில் மட்டும் தகவல்களை அனுப்பும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் இ-மெயிலில் அடிக்கடி தொடர்பு கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்தனர். இந்தநிலையில் செல்வத்துக்கு வந்த இ-மெயிலில் தான் சேமித்த பணம் மற்றும் சில பொருட்களை பார்சலில் அனுப்பி வைப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.
இதற்காக செல்வத்திடம் முகவரியை அனுப்பும்படியும் கூறியுள்ளார். அவரும் தனது முகவரியை இ-மெயிலில் அனுப்பி உள்ளார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் செல்வத்தை தொடர்பு கொண்ட ஒரு நபர், இந்தியில் பேசி உள்ளார். அப்போது அவர் தான் டெல்லி விமானநிலைய கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், அவருக்கு வெளிநாட்டு பார்சல் வந்துள்ளதாகவும், அதை அனுப்பி வைக்க வேண்டுமானால் ரூ.32 ஆயிரத்து 800-ஐ செலுத்தும்படியும் கூறியுள்ளார்.
சைபர்கிரைம் போலீசில் புகார்
அதை நம்பிய செல்வம், ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் சில நாட்களில் அவரை மீண்டும் அந்த நபர் தொடர்பு கொண்டு பார்சலில் வெளிநாட்டு பணம் மற்றும் சில பொருட்கள் உள்ளன. அதற்கு ஒரு சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக ரூ.96 ஆயிரத்து 999-ஐ அனுப்பும்படி கூறியுள்ளார். இப்படி பல்வேறு தவணைகளில் ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் வரை செல்வம் செலுத்தியுள்ளார்.
பின்னர் அவரை தொடர்பு கொண்ட நபர், அந்த பார்சலுக்கு வரி செலுத்த மேலும் ரூ.5 லட்சம் அனுப்ப கூறியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வம் இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.