டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளை


டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 26 Jun 2023 6:45 PM GMT (Updated: 26 Jun 2023 6:45 PM GMT)

சின்னசேலம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

டாஸ்மாக் விற்பனையாளர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த ராயப்பனூர் வி.கூட்டுரோடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சேலம் மாவட்டம் பெரியேரி பகுதியை சேர்ந்த ரவி(வயது 48) என்பவர் மேற்பார்வையாளராகவும், தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே பெருங்கோட்டூர் தெற்கு தெருவை சேர்ந்த மாடசாமி மகன் ஜெய்கணேஷ்(40) என்பவர் விற்பனையாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வியாபாரம் முடிந்ததும் ஜெய்கணேஷ் கடையை பூட்டிவிட்டு விற்பனை பணத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில், அதே பகுதியில் அவர் வாடகைக்கு வசித்து வரும் மாடி வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் பணத்தை வீட்டின் அறையில் வைத்து பூட்டி விட்டு இரவு 10.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வி.கூட்டுரோட்டில் உள்ள ஒரு கடையில் சாப்பாடு வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

ரூ.6 லட்சம் கொள்ளை

அப்போது வீட்டின் கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து ஜெய்கணேஷ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பையில் இருந்த 3 நாட்கள் மதுவிற்ற பணம் ரூ.5 லட்சத்து 87 ஆயிரத்து 710-ஐ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தொியவந்தது.

இதுகுறித்து ஜெய்கணேஷ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

மேலும் இந்த சம்பவம் குறித்து ஜெய்கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டின் பூட்டை உடைத்து மதுவிற்ற பணம் ரு.6 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சின்னசேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story