ரூ.1¼ கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு


ரூ.1¼ கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 23 Aug 2023 4:15 AM IST (Updated: 23 Aug 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.1 கோடியே 21 லட்சத்து 45 ஆயிரம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.1 கோடியே 21 லட்சத்து 45 ஆயிரம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

80 செல்போன்கள் மீட்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த மெகுல்ஷா என்பவர் கடந்த ஆண்டு டெலிகிராம் செயலி மூலம், இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் மர்ம நபர்களிடம் ரூ.92 லட்சத்து 77 ஆயிரத்து 839 பணத்தை இழந்து உள்ளார். இதேபோல் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்டு பணம் இழந்த பலரும் இதுகுறித்து ஊட்டியில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

ஆன்லைன் மோசடியில் பலர் இழந்த ரூ.1 கோடியே 21 லட்சத்து 45 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்க நடவடிக்கை எடுத்தனர். அவ்வாறு மீட்கப்பட்ட பணத்தை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி சிறுவர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமை தாங்கி, புகார்தாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார்.

இதேபோல் நீலகிரி முழுவதும் செல்போன் காணாமல் போனது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் மீட்கப்பட்டது. அந்த செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறியதாவது:-

விழிப்புணர்வு

நீலகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆன்லைன் பண மோசடி, கடன் வழங்குவதாக மோசடி, ஆன்லைன் மூலம் ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.60 லட்சம் மதிப்பிலான 180 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்த நபர்களுக்கு ரூ.1.21 கோடி பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

ஆன்லைன் மோசடி தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பள்ளி, கல்லூரிகள், சமூக வலைதளங்கள் மூலமாகவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் யசோதா, ஜெகதீஸ், கண்ணன், பிரவீன், கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story