செல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17¼ லட்சம் மோசடி; ராஜஸ்தான் வாலிபர் கைது


செல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17¼ லட்சம் மோசடி; ராஜஸ்தான் வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2023 3:00 AM IST (Updated: 25 Oct 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் செல்போன் கடையில் வங்கிக்கணக்கின் பார்கோடை மாற்றி வைத்து நூதன முறையில் ரூ.17¼ லட்சம் மோசடி செய்த ராஜஸ்தான் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனியில் செல்போன் கடையில் வங்கிக்கணக்கின் பார்கோடை மாற்றி வைத்து நூதன முறையில் ரூ.17¼ லட்சம் மோசடி செய்த ராஜஸ்தான் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நூதன மோசடி

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மதன்சிங் (வயது 37). இவர் தேனியில் செல்போன் உதிரிபாகங்கள் மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடை வைத்துள்ளார். அவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், "ராஜஸ்தான் மாநிலம் பார்மர் அருகே ஹார்னியான் பகுதியை சேர்ந்த சேட்டாராம் மகன் தூதாராம் (21) என்பவர் எனது கடையில் கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். அவர் ரூ.3 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்டு கடையில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். எனது கடையில் பண பரிவர்த்தனைக்காக வங்கிக்கணக்கின் பார்கோடு வைத்திருந்தேன். அந்த பார்கோடை தூதாராம் அகற்றிவிட்டு, தன்னுடைய வங்கிக்கணக்கின் பார்கோடு விவரங்களை வைத்து பரிவர்த்தனை செய்துள்ளார். அந்த வகையில் ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 500 மற்றும் கடையில் பல தேதிகளில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.14 லட்சத்து 27 ஆயிரத்து 500ஐ மோசடியாக எடுத்துக்கொண்டு ராஜஸ்தான் சென்று விட்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார்" என்று கூறியிருந்தார்.

தனிப்படை

பின்னர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தேனி போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் முன்பணம் மற்றும் கடையில் மோசடியாக எடுத்த தொகை என மொத்தம் ரூ.17 லட்சத்து 27 ஆயிரத்து 500 மோசடி செய்து விட்டதாக தூதாராம் மீது கடந்த மாதம் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தூதாராம் தனது வாட்ஸ்-அப் எண் மூலம் மதன்சிங்கிற்கு துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அதுதொடர்பான புகைப்படங்களையும் மதன்சிங் போலீசாரிடம் கொடுத்தார்.

வாலிபர் கைது

இதையடுத்து தூதாராமை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றனர். அங்கு தனது வீட்டில் இருந்த தூதாராமை போலீசார் கைது செய்தனர். அவரை நேற்று முன்தினம் தேனிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மிரட்டலுக்கு பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்று தெரியவந்தது.

விசாரணையை தொடர்ந்து அவரை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story