ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் பயனாளிகளுக்கு ரூ.300 கோடி இழப்பீடு


ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில்   லோக் அதாலத் மூலம் பயனாளிகளுக்கு ரூ.300 கோடி இழப்பீடு
x

மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.300 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

மதுரை


மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.300 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

ஐகோர்ட்டில் லோக்அதாலத்

மதுரை ஐகோர்ட்டில் நேற்று (லோக் அதாலத்) மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் சென்னை ஐகோர்ட்டு சட்டப்பணிகள் ஆணைகுழு தலைவர் நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், மின்வாரியம், இன்சூரன்ஸ் வழக்குகள் என ஏராளமான வழக்குகளை சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்து கொள்ளப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகள் விசாரித்தன. இந்த அமர்வுகளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் உதயன், சுப்பிரமணியன், பூபாலன் ஆகியோரும், வக்கீல்கள் சுரேஷ் ஐசக்பால், முகமது முகைதீன், பாலசுப்பிரமணியன் ஆகியோரும் உறுப்பினர்களாக பங்கேற்றனர். மொத்தம் 418 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

முடிவில் 52 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.5 கோடியே 97 லட்சத்து ஆயிரத்து 283 பயனாளிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

இந்த லோக் அதாலத் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐகோர்ட்டு பதிவாளர் (நீதித்துறை) வேங்கடவரதன் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.

மாவட்ட கோர்ட்டு

இதேபோல மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் விபத்து வழக்குகள், மின்சாரம், குடிநீர், இன்சூரன்ஸ், குடும்ப விவகாரம் (விவாகரத்து வழக்குகள் தவிர), நிலம் கையகப்படுத்துதல், நுகர்வோர் குறைதீர் வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் என மொத்தம் 17,730 வழக்குகள் சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த வழக்குகளை மொத்தம் 27 அமர்வுகள் விசாரித்தன. இதில் மாவட்ட நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வக்கீல்கள், சமூக சேவகர்கள் ஆகியோர் கொண்ட குழு அடங்கும். விசாரணை முடிவில், 16,894 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் ரூ.289 கோடியே 20 லட்சத்து 62 ஆயிரத்து 368 இழப்பீடாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

குறிப்பாக ஒரு விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ரூ.1 கோடியை இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டது.

ரூ.300 கோடி இழப்பீடு

இந்த லோக் அதாலத்தில் மாவட்ட நீதிபதிகள் ராஜவேல், தமிழரசி, செங்கமலச்செல்வன், அனுராதா, ரஜினி, நாகலட்சுமி, சார்பு நீதிபதிகள் பசும்பொன்சங்கையா, ராபின்ஜார்ஜ், ராஜா மகேஷ், அகிலா, சண்முகவேல் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி மூலம் நீண்டநாட்கள் நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு சுமூக தீர்வு கண்டதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.300 கோடியை இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story