ரஷியா-ஜெர்மனி இடையிலான எரிவாயு குழாய்களில் கசிவு - ஐரோப்பாவின் எரிசக்தி தேவையை பாதிக்கும் என தகவல்


ரஷியா-ஜெர்மனி இடையிலான எரிவாயு குழாய்களில் கசிவு - ஐரோப்பாவின் எரிசக்தி தேவையை பாதிக்கும் என தகவல்
x

குழாய்களை சீரமைக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை கணிக்க முடியாது என நார்ட் ஸ்ட்ரீம் அதிகார இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததை கண்டித்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் ரஷியாவிடம் உணவு, எரிவாயு உள்ளிட்ட பல்வேறு இறக்குமதி சரக்குகளை நம்பி இருந்த ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் எரிவாயு தேவைக்காக ரஷியாவை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே ரஷியா-ஜெர்மனி இடையே உள்ள 'நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன்' என்று அழைக்கப்படும் எரிவாயு குழாய்கள் மூலம் நடைபெற்று வந்த இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்தியது.

இந்த நிலையில் இந்த நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைனில் 4 இடங்களில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பால்டிக் கடல் பகுதியில் இந்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த குழாய்கள் வேண்டுமென்றே சீர்குலைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.

இந்த குழாய்களை சீரமைக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை கணிக்க முடியாது என நார்ட் ஸ்ட்ரீம் அதிகார இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சூழல் ரஷியாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடி நிலையை மேலும் அதிகரிக்கும் என்றும், ஐரோப்பாவின் எரிசக்தி தேவையை பாதிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.


Next Story