பல்லாவரத்தில் பலத்த மழையால் சோகம்; பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாடியில் தூங்கிய பெண் பலி


பல்லாவரத்தில் பலத்த மழையால் சோகம்; பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாடியில் தூங்கிய பெண் பலி
x

பல்லாவரத்தில் பலத்த மழையால் பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாடியில் படுத்து தூங்கிய பெண் பரிதாபமாக இறந்தார்.

சென்னை

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் பாரதி நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்தியவாணி (வயது 55). இவர், வீட்டு வேலைகள் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னை புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

சத்தியவாணி வீட்டில் புழுக்கமாக இருப்பதாக கூறிவிட்டு வீட்டின் மொட்டை மாடியில் சென்று படுத்து தூங்கினார். இவரது வீட்டின் பக்கத்தில் உள்ள சரவணன் என்பவரது வீட்டின் சுற்றுசுவர் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில் மழையின் காரணமாக அந்த சுற்றுசுவர் திடீரென இடிந்து, மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த சத்தியவாணி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சத்தியவாணி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

ஆனால் இரவு நேரம் என்பதால் வீட்டில் தூங்கிய அவருடைய கணவர் கன்னியப்பனுக்கு இது தெரியவில்லை. நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் மாடியில் தூங்க சென்ற மனைவி கீழே இறங்கி வராததால் சந்தேகம் அடைந்த கன்னியப்பன், மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது சத்தியவாணி மீது பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்து கிடப்பதையும், அவர் இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார், பலியான சத்தியவாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story