பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை


பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை
x

விழுப்புரம் அருகே பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், இதை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே பில்லூர் கிராமம் உள்ளது. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

பில்லூர், திருப்பாச்சனூர், தென்குச்சிபாளையம், காவணிப்பாக்கம், தளவானூர், சேர்ந்தனூர், அரசமங்கலம், ஆனாங்கூர், சாமிப்பேட்டை பிள்ளையார் குப்பம், ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியை மையமாக கொண்டு, சிலர் கஞ்சா விற்பனையை செய்து வருகிறர்கள். மாணவர்களின் மூளையை சலவை செய்து, அவர்களுக்கு கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். மாணவர்களும், தெரிந்தோ தெரியாமலோ இந்த பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள்.

மோதல் உருவாகும் சூழல்

இதனால், அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. அதோடு, பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்படும் நிலையும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவதுடன், மாணவர்களுக்கு இடையிலான மோதல் கிராமங்களுக்கு இடையிலான மோதலாக உருவாகும் அபாய நிலையும் உருவாகி வருகிறது. எனவே இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் முன்பு, போலீசார் கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அதேபோன்று, மாணவர்கள்இடையே ஒழுக்கம் மற்றும் சாதிக்க வேண்டியது, எதிர்கால வாழ்க்கை குறித்து ஆசிரியர்கள் தேவையான ஆலோசனைகளை வழங்கி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story