தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ரூ.2½ கோடிக்கு விளைபொருட்கள் விற்பனை


தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ரூ.2½ கோடிக்கு விளைபொருட்கள் விற்பனை
x
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:46 PM GMT)

தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ரூ.2½ கோடிக்கு விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ரூ.2½ கோடிக்கு விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

தேசிய வேளாண் சந்தை

இந்தியா முழுவதும் ஒரே உரிமம்-ஒரே வணிகம்-ஒரே வணிக சந்தை என்ற நோக்கில் மத்திய அரசின் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி பரமக்குடி, கமுதி, ராஜசிங்கமங்கலம், முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர் இல்லாமல் மறைமுக ஏலம் மூலம் அதிக விலைக்கு விற்று பயனடையலாம்.

மேலும் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் விளைபொருட்களை மின்னணு பரிவர்த்தனை செய்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் அதிக லாபம் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

ரூ.2½ கோடிக்கு வர்த்தகம்

ராமநாதபுரம் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களான நெல், மிளகாய் வத்தல், பருத்தி மற்றும் சிறு தானியங்கள் ஆகியவற்றை தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் விற்பனை செய்து பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் 15,751 விவசாயிகளும், 684 வியாபாரிகளும் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மொத்தம் 1,354 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.10.5 கோடிக்கு வேளாண் விளைபொருட்களின் வணிகம் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டில் ரூ.2.48 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் 306 விவசாயிகள், 184 வணிகர்கள் பயனடைந்துள்ளனர். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story