சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் 7 நாட்கள் ஜாமீனில் விடுவிப்பு


சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் 7 நாட்கள் ஜாமீனில் விடுவிப்பு
x

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சேலம்,

ஊழல், முறைகேடு செய்ததாக புகாரின்பேரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நிலையில், சேலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன் ஜெகநாதன் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 7 நாட்கள் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 7 நாட்கள் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

வழக்கின் முழு விவரம்:-

சேலம் அருகே கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், இணைப்பேராசிரியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகிய 4 பேர் சேர்ந்து 'பூட்டா்' அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். இது தவிர தங்கவேல் உள்பட 3 பேர் இணைந்து 'அப்டெக்கான் போரம்' என்ற மற்றொரு அமைப்பை தொடங்கி உள்ளனர்.

இவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு, பல்கலைக்கழக துணை அமைப்புகளாக இவற்றை தொடங்கி உள்ளனர். மேலும் அதில் தங்களை இயக்குனர்களாக கொண்டு உள்ளனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்படும்.

எனவே பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், இணைப்பேராசிரியர் சதீஷ் ஆகிய 3 பேர் பெரியார் பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-ன்படி பொது ஊழியர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் புதிதாக எந்த தொழிலையும் தொடங்க முடியாது.

தனியார் நிறுவனம் தொடங்குவதாக இருந்தாலோ அல்லது அதில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ அதற்கு பல்கலைக்கழக அனுமதியும், தமிழக அரசு அனுமதியும் பெற வேண்டும். எனவே விதிமுறை மீறி தனியார் நிறுவனம் தொடங்கிய துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் அவர் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே, பல்கலைக்கழக கட்டமைப்புகளை தவறாக பயன்படுத்தி சொந்த நிறுவனங்கள் தொடங்கி லாபம் அடையும் வகையில் செயல்பட்டது, அரசு அனுமதி பெறாமல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டே போலி ஆவணங்கள் தயாரித்து தனி நிறுவனங்கள் தொடங்கியது, பூட்டா் அறக்கட்டளை மூலம் அதிகம் பணம் வசூலித்தது, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது உள்ளிட்ட 13 வகையான ஊழல், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி தமிழக அரசு உயர்நிலைக்குழுவை அமைத்தது. அதன்பேரில் உயர்நிலைக்குழுவினர் பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து நேற்று மாலை துணைவேந்தர் ஜெகநாதன் வெளியில் வந்தார். அப்போது பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு தனிப்படை போலீசார், துணைவேந்தர் ஜெகநாதனை அதிரடியாக கைது செய்தனர்.


Next Story