சேலத்தை குப்பையில்லா நகரமாக உருவாக்க வேண்டும்


சேலத்தை குப்பையில்லா நகரமாக உருவாக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Jan 2023 1:00 AM IST (Updated: 15 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தை குப்பையில்லா நகரமாக உருவாக்க வேண்டும் என்று சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சேலம்

சேலத்தை குப்பையில்லா நகரமாக உருவாக்க வேண்டும் என்று சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

புகைப்பட கண்காட்சி

சேலம் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.

புதிய வாகனங்கள்

தொடர்ந்து மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. இதில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரூ.10.62 கோடியில் 75 இலகு ரக வாகனங்கள், 5,200 வண்ணக் குப்பை கூடைகள், சாலைகளை சுத்தம் செய்யும் 3 எந்திரங்கள் உள்பட துப்புரவு பணிக்கான வாகனங்களை மாநகராட்சியின் பயன்பாட்டுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

சேலம் மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகள் தனியாகவும், மக்காத குப்பைகள் தனியாகவும் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்குவதற்கும், மக்காத குப்பைகளை குப்பை கிடங்கிற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

குப்பையில்லா நகரமாக...

மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் குப்பையில்லா நகரமாக உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தினமும் சேகாரமாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்திட நடவடிக்கை மேற்கொள்ள சில வழிமுறைகள் கடைபிடிக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் குப்பையில்லா நகரமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சேலம் மாநகராட்சியில் மக்கும் குப்பைக்கு தனியாகவும், மக்காத குப்பைக்கு தனியாகவும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டு காலத்திற்குள் சேலம் மாநகரை குப்பையில்லா நகரமாக உருவாக்க வேண்டும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), மண்டல குழுத்தலைவர்கள் உமாராணி, தனசேகர், அசோகன், கலையமுதன், சுகாதார நிலைக்குழுத்தலைவர் சரவணன், மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய வழித்தடத்தில் இயக்கம்

சேலம் கன்னங்குறிச்சியில் இருந்து 2 புதிய வழித்தடங்களில் டவுன் பஸ்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதிய வழித்தடங்களில் அரசு பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பஸ்சில் பொதுமக்களுடன் சிறிது தூரம் பயணம் செய்தார். அதாவது, அடிவாரம் முதல் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கும், பழைய பஸ் நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி, எமரால்டு பள்ளி வழியாக, அடிவாரம் சென்று அதன்பிறகு மீண்டும் பழைய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் சென்று வரும் வகையில் இயக்கப்பட உள்ளது.


Next Story