புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 31 டன் காய்கறிகள் விற்பனை


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 31 டன் காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 23 Sep 2023 7:30 PM GMT (Updated: 23 Sep 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில் 31 டன் காய்கறிகள் விற்பனையானது.

காய்கறிகள் விற்பனை

புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகளும், பொதுமக்களும் உழவு சந்தைக்கு வரத் தொடங்கினர் நேற்று ஒரே நாளில் மட்டும் 31 டன் காய்கறிகளும் 3 டன் பழங்களும் விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு ரூ.18 லட்சத்து 27 ஆயிரத்து 813 ஆகும்.

146 விவசாயிகள்

தர்மபுரி உழவர் சந்தைக்கு நேற்று 146 விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சுமார் 7 ஆயிரம் பேர் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைக்கு வந்தனர். வழக்கமாக தர்மபுரி உழவர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25 டன் காய்கறிகள் விற்பனையாகும். நேற்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு வந்தது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், மூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

வரும் சனிக்கிழமை நாட்களில் தர்மபுரி உழவர் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் செல்போன் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் உழவர் சந்தை உள்ள கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story