வாலிநோக்கம் உப்பளங்களில் உப்பு விளைச்சல் அமோகம்


வாலிநோக்கம் உப்பளங்களில் உப்பு விளைச்சல் அமோகம்
x

கடுமையான வெயிலின் தாக்கத்தால் வாலிநோக்கம் பகுதியில் உப்பு விளைச்சல் அதிகரித்து விலையும் உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடுமையான வெயிலின் தாக்கத்தால் வாலிநோக்கம் பகுதியில் உப்பு விளைச்சல் அதிகரித்து விலையும் உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உப்பளம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழிலும் அதிகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி, ஆனைகுடி, கோப்பேரி மடம், உப்பூர், சம்பை, பத்தநேந்தல் உள்ளிட்ட பல ஊர்களில் உப்பு உற்பத்தி செய்யும் உப்பளபாத்திகள் உள்ளன.

அதுபோல் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும். இந்த நிலையில் இந்த ஆண்டின் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கி 4 மாதங்கள் முடிந்து விட்டது. இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தாக்கம் மிக அதிகமாக இருந்து வருவதால் சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியில் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் களைகட்டி உள்ளது.

கடல்நீர்

வாலிநோக்கம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் உப்பளங்களில் கல் உப்பு உற்பத்தி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடலில் இருந்து மோட்டார் பம்ப் செய்து எடுக்கப்படும் கடல் நீரானது பாத்திகளில் நிரப்பப்பட்டு அதன்பின்னர் பாத்தியில் உள்ள கடல் நீரில் இருந்து கல் உப்பை பிரித்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுபற்றி உப்பள தொழிலாளி கூறியதாவது:- இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோடைமழை அடுத்தடுத்து பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த சில வாரங் களாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருவதால் சீசன் எதிர்பார்த்ததை விட நன்றாக உள்ளதுடன் கல் உப்பு விளைச்சலும் அதிகமாக உள்ளது.

கல் உப்பு

ஒரு டன் கல்உப்பு 4 ஆயிரத்திற்கும் அதிகமாக விலை போகின்றது. இன்னும் 3 மாதங்கள் சீசன் உள்ளதால் உப்பு உற்பத்தி தற்போது இருப்பதை விட இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வாலிநோக்கம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கல்உப்பு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கம்பெனிகளுக்கு மருந்து மாத்திரை பொருட்கள் தயாரிப்பதற்கும் ரசாயன மருந்துகள் தயாரிப்பதற்கும் அனுப்பப்படுவதாகவும் மற்றும் பல்வேறு ஊர்களில் உள்ள பெரிய ஓட்டல்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.


Next Story