சனாதனம் எங்கள் உயிர் மூச்சு


சனாதனம் எங்கள் உயிர் மூச்சு
x
தினத்தந்தி 18 Sept 2023 1:45 AM IST (Updated: 18 Sept 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

சனாதனம் எங்கள் உயிர் மூச்சு என்று கோவையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோயம்புத்தூர்


கோவை


சனாதனம் எங்கள் உயிர் மூச்சு என்று கோவையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


75 ஜோடிகளுக்கு திருமணம்


பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாளையொட்டி நேற்று கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் செட்டிப்பாளையத்தில் 75 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, சீர்வரிசை மற்றும் நாட்டு மாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து 73 வகையான சீர்வரிசை பொருட்கள் மற்றும் நாட்டு மாடுகளை வழங்கி பேசினார். தொடர்ந்து ஒரு ஆண் குழந்தைக்கு யோகி ஆதித்யநாத் என்று பெயர் சூட்டினார்.


பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரிக்கும், பா.ஜ.க. தேசிய தலைவருக்கும் கடிதம் எழுதி உள்ளோம்.


முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனைத்து போலீசாரையும் திருடன் என சொல்லியதாக கேள்விப்பட்டேன். நல்ல போலீசாரை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி தான் இருக்கும். அவர் மாலை 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரியும், பின்பு ஒரு மாதிரியும் பேசுவார். அவர் அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார் என்பது எனக்கு தெரியும்.


அண்ணா குறித்து தவறாக பேசவில்லை


அண்ணா குறித்து நான் பேசியதில் தவறே இல்லை. அண்ணா மாபெரும் தலைவர். திராவிட அரசியலில் குடும்ப அரசியல் வேண்டாம் என்று சொன்ன மாமனிதர். சுத்தமான அரசியலை கொடுக்க நினைத்தவர். இன்று அண்ணா ஆதரவாக வருபவர்கள் அண்ணா வழிப்படி நடந்து கொண்டுள்ளனரா?.


அண்ணா தான் வளர்த்த 4 குழந்தைகளையும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்னவர். அண்ணாவின் முதல் வளர்ப்பு மகன் இறுதி காலத்தில் உடல்நல பாதிப்பால் செலவுக்கு பணமில்லை என்பதால், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


எத்தனை பேருக்கு அண்ணாவின் பேர குழந்தைகளின் பெயர் தெரியும்? சரித்திரம் சொல்வதை சொல்கிறேன். அண்ணாவை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் ஏற்கிறேன். கொள்கையில் வேறுபாடு இருக்கலாம். நாங்கள் யாரையும் கடவுளாக பார்ப்பதில்லை. என்னுடைய கருத்தை கருத்தாக பார்க்க வேண்டும்.


உயிர் மூச்சு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சனாதனம் குறித்து தெரியாது. சனாதன தர்மம் எங்கள் உயிர் மூச்சு. சனாதன தர்மத்தை பற்றி உண்மையை பேச வேண்டும். கட்சியின் உயிர் மூச்சான சனாதனத்தை பாதுகாக்க முடியவில்லை என்றால் எதற்கு எனக்கு தலைவர் பதவி.


என்னுடைய கடமை பா.ஜ.க.வை தமிழகத்தில் வளர்க்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி என்று இருந்தால் கொள்கை மாறுபாடுகள் இருக்கும். அதற்காக யாருக்கும் அடிமையாக இருக்க முடியாது. தனி மரம் எப்போதும் தோப்பாக முடியாது.


தமிழகத்தில் பா.ஜ.க. 2026-ம் ஆண்டில் தனித்து வரும். 2024-ம் ஆண்டு தேர்தல் மோடிக்கான தேர்தல்.


விஸ்வகர்மா திட்டம்


கோவை கார் வெடிப்பு வழக்கில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை என்பது தி.முக. கட்சிக்கு புதுசு இல்லை. கோவைக்கு வரக்கூடிய ஆபத்து இன்னும் முற்றிலும் விலகவில்லை.


தமிழகத்தில் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும். இதை தமிழக அரசால் தடுத்து நிறுத்த முடியாது.


இந்தியா கூட்டணி முதல் கூட்டமே நடைபெறவில்லை. இதனால் அந்த கூட்டணி உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்து இருப்பது போல் உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


இதில் தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன், மாநில பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், பாலகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.



Next Story