சனாதன விவகாரம்: ஆ.ராசாவால் திமுக தலைவராக முடியுமா? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி


சனாதன விவகாரம்: ஆ.ராசாவால் திமுக தலைவராக முடியுமா? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
x
தினத்தந்தி 6 Sep 2023 7:50 AM GMT (Updated: 6 Sep 2023 7:54 AM GMT)

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அரியாங்குப்பத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. கருணாநிதி சிலையை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது, திராவிட இயக்கங்களால் தான் கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகிக்கிறார் என்று பேசினார். அவர் பேச்சுக்கு கவர்னர் தமிழிசை இன்று பதிலடி கொடுத்தார்.

புதுவை கடற்கரை சாலையில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் கடுமையாக படித்ததால் தான் முன்னேறியுள்ளோம். மற்றொருவரின் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அவர்களை தூக்கிக்கொண்டுபோய் மேலே வைத்தனர். நான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.

என் முயற்சியால் வெளிநாட்டிற்கு சென்று படித்தேன். சனாதனம் என்றால் தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ஆ.ராசா எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார். தம்பி உதயநிதி அதைப்பற்றி தெரியாமல் பேசக்கூடாது. ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம். சனாதனம் என்றால் சாதி மட்டும் தான் என சொல்கின்றனர்.

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள், ஏன் தி.மு.க.வில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் பதவியை தர மறுக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.

உங்கள் கட்சியில் உங்களைப்போல ஒருவர் தலைவராக வர முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பவர்கள் உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்தை முதலில் எதிருங்கள். உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே தி.மு.க.வில் இல்லையா? ஆனால் அவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது. ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? முதல்-அமைச்சராகவோ? ஆக்கிவிட முடியுமா? நீங்கள் எதையும் செய்வதில்லை.

உலகிற்கு சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம்? தமிழகம் கல்வியில் உயர பெருந்தலைவர் காமராஜர் போட்ட விதை. நீங்களே எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுவதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆ.ராசா உங்கள் கட்சியில் நீங்கள் தலைவராக முடியுமா? என முதலில் சொல்லுங்கள். அதன்பின் சனாதனம் பற்றி பேசுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story