தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மீண்டும் பணி வழங்க கோரி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
மீண்டும் பணி வழங்க கோரி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
பொள்ளாச்சி நகராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். அரசு நிர்ணயம் செய்த சம்பளம் வழங்க வேண்டும். சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எப். தொகையை நிர்வாக பங்களிப்புடன் செலுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார, துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். தூய்மை பணியாளர்கள் பதாகைகளை கையில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மீண்டும் பணி நியமனம்
இதுகுறித்து சுகாதார, துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து சப்-கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பணி நீக்கம் செய்யப்பட்டதில் 38 பேருக்கு மீண்டும் பணி வழங்கவில்லை. எனவே மீண்டும் பணி வழங்கும் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.