தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் மூலம் பணியிடங்களை நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள்
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பலர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தனியார் மூலம் பணியாளர்கள் நியமிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறினர். அதன்பிறகு அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது 3 தலைமுறைகளாக மாநகராட்சி முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
பாதுகாக்க வேண்டும்
இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் தனியார் மூலம் நியமிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை கைவிட்டு எங்களை பாதுகாக்க வேண்டும். மேலும் மாதா, மாதம் சம்பளம் வழங்க வேண்டும். பிடித்தம் செய்யும் பணத்தை உரிய முறையில் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.
இதில் சேலம் மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் கோவிந்தன், தலைவர் உதயகுமார், மற்றும் தியாகராஜன், கருப்பண்ணன், வெங்கடபதி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். மறியல் போராட்டம் நடத்த முயன்று கலெக்டர் அலுவலகம் முன்பு பலர் திரண்டு நின்றதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






