தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நீண்ட காலமாக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அரசு துப்புரவு தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.485 ஊதியம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தும் பேரூராட்சி நிர்வாகம் தொழிலாளருக்கு ரூ.330 மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பலமுறை பேரூராட்சி நிர்வாகம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், கோர்ட்டு உத்தரவின்படி 480 நாட்கள் பணி செய்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று தூய்மை பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார்.
முன்னதாக ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பேரணியாக பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேராட்சி நிர்வாகம் ஊதிய உயர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.