கட்சி நிகழ்ச்சி போல் சட்டமன்ற நிகழ்வுகளை மாற்ற நினைக்கும் திமுகவினர்: சசிகலா கண்டனம்


கட்சி நிகழ்ச்சி போல் சட்டமன்ற நிகழ்வுகளை மாற்ற நினைக்கும் திமுகவினர்: சசிகலா கண்டனம்
x

அரசும், கவர்னரும் தங்களது விரோத போக்கை தொடர்ந்து கடைபிடிப்பதை கைவிடுவதுதான் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுகவினர் கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது போன்று தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை மாற்ற நினைப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"தமிழக சட்டமன்றத்தில், திமுக தலைமையிலான அரசால் உருவாக்கப்பட்ட ஆளுநர் உரையை, தமிழக ஆளுநர் வாசிக்காமல் புறக்கணிப்பதும், ஆளுநரை வைத்துக்கொண்டே அவருக்கு பதிலாக சபாநாயகர் ஆளுநர் உரையை நிறைவேற்றுவதும் துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக வரலாற்றில் ஏற்படாமல் தவிர்க்கவேண்டும். குறிப்பாக திமுகவினர் தமிழக சட்டமன்றத்தை அனைவருக்கும் பொதுவானதாக கருதவில்லை. ஏதோ மயிலை மாங்கொல்லையில் திமுகவினர் கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது போன்று தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை மாற்ற நினைப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக ஆளுநருக்கும், திமுக தலைமையிலான அரசுக்கும் நாளுக்கு நாள் விரோத மனப்பான்மை அதிகரித்துக்கொண்டே செல்வதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. இதன் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் தான் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

தமிழக ஆளுநர் உரையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்படுகிறது என்றும், வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டது உள்ளிட்ட உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாலும், திமுகவினரால் உருவாக்கப்படும் ஆளுநர் உரை, தமிழக மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. திமுக தலைமையிலான அரசும், தமிழக ஆளுநரும் தங்களது விரோத போக்கை தொடர்ந்து கடைபிடிப்பதை கைவிடுவதுதான் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது.

திமுகவினர் வாக்களித்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிடும் வகையில் மக்கள் நலத்திட்டங்களை அளித்திட வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தின் மாண்பினையும், மரபுகளையும், விதிகளையும் காப்பாற்றிடும் வகையில் செயலாற்றுவது அனைவரது கடமையாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story