சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; கைதான காவலருக்கு இடைக்கால ஜாமீன்


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; கைதான காவலருக்கு இடைக்கால ஜாமீன்
x
தினத்தந்தி 6 March 2024 9:01 AM GMT (Updated: 6 March 2024 10:38 AM GMT)

மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி வெயில் முத்து மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது கடையை அதிக நேரம் திறந்து வைத்திருந்ததாக கூறி சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். காவல்நிலையத்தில் போலீசார் கொடூரமாக தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. போலீசார், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த காவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் இவர்கள் யாருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவரான காவலர் வெயில் முத்து, தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, வெயில் முத்துவுக்கு காவல்துறை பாதுகாப்புடன் 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன்படி இன்று மாலை 6 மணி முதல் வரும் சனிக்கிழமை மாலை 6 மணி வரை வெயில் முத்துவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story