அரசு வேலை வாங்கித் தருவதாக கூறிரூ.30 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது


அரசு வேலை வாங்கித் தருவதாக கூறிரூ.30 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:46 PM GMT)

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.30 லட்சம் மோசடி செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

ரூ.30 லட்சம் மோசடி

திண்டுக்கல்லை சேர்ந்தவர் மலர்வண்ணன் (வயது 46). இவர், திருமணம் முடிந்து போடி அருகே பி.நாகலாபுரத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், 'கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள எடப்பள்ளியை சேர்ந்த விவின் பாபு (47), நிலக்கோட்டையை சேர்ந்த நபர் ஒருவர் ஆகியோர் எனது மைத்துனர் ராஜேஷ் கண்ணன் உள்பட சிலருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினர். அதை நம்பி விவின்பாபுவுக்கு வங்கிக் கணக்கு மூலம் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பினேன். ஆனால் அவர் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டார்' என்று கூறியிருந்தார்.

தலைமறைவு

இந்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விவின் பாபுவை தேடி வந்தனர்.

மேலும் விவின்பாபுக்கு உடந்தையாக இருந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ஒருவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தலைமறைவான விவின் பாபு இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் பலமாதங்களாக போலீசார் திணறினர்.

என்ஜினீயர் கைது

இந்நிலையில் விவின்பாபு கொச்சி துறைமுகம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கோடி தலைமையிலான தனிப்படையினர் கொச்சி விரைந்தனர்.

போலீசாரை பார்த்ததும் அவர் ஒரு கப்பலுக்கு அடியில் சென்று அவர் பதுங்கினார். இருப்பினும் அவரை போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் தேனிக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், என்ஜினீயரான விவின் பாபு படித்து முடித்துவிட்டு சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததும், அதன்பிறகு அவர் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதற்கிடையே கைதான அவர், தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story